கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகளையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக மக்களை தயார் செய்யும் வேலை தீவிரமடைந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் முடியும்.
இந்தியாவில் இதுவரை முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் திசைவழியை தீர்மானித்து வந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தனிநபரும் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற முடிவை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுக்க துவங்கியிருக்கின்றன. இந்நடவடிக்கை ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக மிகப்பெரிய அபாய அறிகுறியுடன் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தகவல் ஊடகங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்படுவது அம்பலமாகி வருகிறது.
இந்திய இணைய பயன்பாடு
நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்று இந்திய சந்தைக்கான ஆராய்ச்சி குழு ( ஐஎம்ஆர்பி) தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் 62 கோடியே 70 லட்சம் பேர் பயன்படுத்துவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் வளர்ச்சி விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. 2015ல் 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி தற்போது 35சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
சமூக ஊடகம் பயன்பாடு
இணைய பயன்பாடு விரிவாக்கத்தின் விளைவாக பிரதான ஊடகங்களாக விளங்கும் பத்திரிகை, தொலைக் காட்சிகளை பின்னுக்கு தள்ளி இன்று சமூக ஊடகங்கள் அனைவரையும் எளிதாக எட்டக்கூடிய இடத்திற்கு வந்தி ருக்கின்றன. சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரில் 18 வயது முதல் 34 வயதுடையோர் 72 சதவிகிதம் பேர். டிவி பார்ப்பதில் சராசரியாக செலவிடும் நேரம் 2 மணி 51 நிமிடம். இணையத்தை பயன்படுத்தும் 56 கோடி பேரில் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர் 31 கோடி. இதில் மொபைல் போன் மூலம் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர் 29 கோடி. அதாவது இந்தியாவில் 3ல் ஒருவர் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோராக மாறியிருக்கின்றனர். சமூக ஊடகத்தில் யூடியூப் 93 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், பேஸ்புக் 89 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும், வாட்ஸ்ஆப் 82 சதவிகிதத்துடன் 3 வது இடத்திலும் இருக்கிறது. அதிக நேரம் செலவிடுவதில் முதலிடத்தில் டின்டர் (TINDER), 2ம் இடத்தில் நெட்பிளிக்ஸ்(NETFLIX) 3ம் இடத்தில் டென்சென்ட் வீடியோ (TENCENTVIDEO) வீடியோகேம் இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் எந்த அளவிற்கு சமூக ஊடகம் தாக்கத்தை செலுத்தி வருகிறது என்பதை அறிய முடிகிறது. இவையெல்லாம் மக்களுக்கு செய்யும் சேவை போல் தெரியும். ஆனால் இதன் பின்னணியில் இயங்கும் மிகப் பெரிய வணிகமும், நமது அன்றாட செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக இருப்ப தும் பெருமளவில் வெளியே தெரிவதில்லை. (ஆதாரம்:IMRB REPORT 2019 JAN ) வலைப்பின்னல்
ஊடகங்கள் வழியாக மிகப்பெரிய வர்த்தக வலைப் பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வேலையும் நயவஞ்சகமாக அரங்கேற்று கின்றன. இதில் உள்நாட்டு சிறுகுறு தொழில் சார்ந்த உற்பத்தி பொருட்கள் அழிக்கும் வேலையும் சப்தமின்றி நடைபெறு கிறது. சமூக ஊடகத்தின் வழியே யார் எதை தேடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது. எதனை விரும்பு கின்றனர். எதை வெறுக்கின்றனர் என்பதை வயது, படிப்பு, பாலினம், நம்பிக்கை, பகுதி, அங்கிருக்கும் சூழல் உள்ளிட்ட விபரங்கள் மிகநுணுக்கமாக மைக்ரோ மற்றும் நேனோ லெவலில் தொகுக்கப்படுகிறது. இந்த விபரங்களை யாருக்கு கொடுத்து, யாரை நாடி செல்ல வைப்பது என்பதையும் இந்த சமூக ஊடகங்களே தீர்மானிக்கின்றன. தற்போது ஒரு படி மேல் சென்று எந்த கார்ப்பரேட்கள் எந்த பகுதி மக்களை நுகர்ந்து ஊதி பெருக்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்கின்றன. சேகரிக்கும் தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு ஏற்ப விலையை நிர்ண யம் செய்து சமூக ஊடகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் விற்று விடுகின்றன. இது ஒரு வகையான வியாபாரம்.மற்றொன்று சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து, அந்த பொருளை நுகர்வதற்கு எந்த பகுதி மக்களை நுகர்வோர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்ப தையும் சமூக ஊடகங்களின் வாயிலாக தீர்மானிக்கின்றன.
கண்காணிப்பு
உதாரணமாக பேஸ்புக் பயன்படுத்தும் நாம் எதை விரும்புகிறோம். எதுமாதிரியான செய்திகளுக்கு லைக்போடு கிறோம், எதை நிராகரிக்கிறோம். என்ன தேடுகிறோம் என்பது உள்ளிட்ட விபரங்கள் கோப்புகளாக மாற்றப்படுகின்றன. இதனை நமது பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் ஆக்டிவிட்டி லாக்கை பார்த்தால் தெரியும். இங்கு நம் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நம்மை பற்றிய ஒரு ப்ரோஃபைல் உருவாக்கும். பின்னர் அதனை தொடர்ந்து மேம்படுத்தி தகவல்களை பிரித்து தேவையான போது பயன்படுத்திக் கொள்ளும். அதன் அடிப்படையில்தான் நமது பக்கத்தில் செய்திகள் தகவல்கள் (நியூஸ்ஃபீட் ) வரும். அதேபோல் கடந்தாண்டு நாம் பதிவிட்டதில் பலர் லைக்செய்திருந்தால் அந்த பதிவு மறுவருடம் அதே நாளில் நமது பக்கத்தில் வெளி யாவதையும் பார்க்கலாம். இதுவும் கண்காணிப்பின் அடிப்படையில் நடப்பதுதான். இதேபோல் கூகுள் இணைய பக்கத்திலோ, யூடியூப் பகுதிக்கோ சென்று நாம் எதை தேடுகிறோமோ அது குறித்த தகவல்கள் குக்கீஸ் என்ற பெயரில் சேமிக்கப்படும். அப்படி சேமிக்கப்படும் தகவல்கள் 10நிமிடங்களுக்கு ஒரு முறை கூகுள் நிறுவனம் நம் கோப்புகளில் மேம்படுத்திக் கொண்டே இருக்கும். இதேபோல் பேஸ்புக் ஒவ்வொரு 15நிமிடத்திற்கு ஒரு முறை நமது தகவல்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கும். இசைவு உற்பத்தி இன்றைய ஊடக உலகம் முழுவதும் டிஜிட்டல் சாம்ராஜ் யங்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனை கையில் வைத்திருப்போர், மக்களுக்கு எதிரான கொள்கைகள், செய்திகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை மக்களே ஏற்றுக் கொள்ளும்படி அவர்களின் இசைவை நுணுக்கமாக உற்பத்தி (manufacturing consent ) செய்கின்றன. இதே போல் கார்ப்பரேட் உற்பத்தி பொருட்களை மட்டும் மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும் மூளைச்சலவையும் நடைபெறு கிறது.இதனையே பேரறிஞர் நோம்சாம்ஸ்கி இசைவு உற்பத்தி என்கிறார். ஊடகங்கள் சென்றடையாத கிராமப்புற பின்தங்கிய பகுதிகளும் இதற்கு ஆட்பட்டு விடுகின்றன. காரணம் இந்த சமூகத்தை ஆதிக்கம் செலுத்துகிற சமூக, பொருளாதார, அரசியல் அனைத்தையும் இந்த ஊடகங்க ளே வழிநடத்துகின்றன. அதன் வழியாகவும் கருத்துரு வாக்கம் நடைபெறுகிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மோசடி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி செய்தி உலகையே ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது. அமெரிக்கா முழுவதும் டிரம்ப் வெற்றி பின்னணியில் ரஷ்யா அது,இது என விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருந்த வேளையில், “எனக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. உண்மையை கூறுகிறேன்” என்றார் ஒருவர். அவர் நாங்கள் பேஸ்புக் மூலம் வாக்காளர்களின் தகவல்களை திரட்டி, உளவியல் வல்லுநர்கள் உதவியுடன் டிரம்பிற்கு வாக்க ளிக்க பல மோசடிகளை செய்தோம். வாக்காளர்களை வசியம் செய்து எதிர்க்கட்சிகளை எதிராளியாக மாற்றினோம் என்றார். இந்த வேலைகளை செய்த கேம்பிரிட்ஜ் அனாலி டிகாவில் மீத்தகவல் ஆய்வாளராக ( big data analyst) பணியாற்றிய கிறிஸ்டோபர் வையலி என்பவர். இந்த சதியில் கேம்பிரிட்ஜ் அனாலிடிக்காவின் தாய் நிறுவன மான குளோபல் சயின்ஸ் ரிசர்ச் ( ஜிஎஸ்ஆர் ) நிறுவனமும் இணைந்து செயல்பட்டது விசாரணையில் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதனை விசாரணை செய்த அமெரிக்க பெடரல் வர்த்தக மையம் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் விதித்திருக்கிறது.
பாஜகவின் மோசடி கூட்டு
இதே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 2014ல் மோடியை பிரதமராக்க இதே போல் மோசடிகளை இந்தியா வில் அரங்கேற்றியிருக்கிறது. இந்த மோசடிகளை வெளிக் கொண்டு வந்த கிறிஸ்டோபர் வையலி பிரிட்டிஷ் நாடாளு மன்ற குழுவிடம் அளித்திருக்கும் அறிக்கையில் இந்தியா வில் மோடிக்கு எப்படியெல்லாம் வேலை செய்தோம் என்ற அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். குறிப்பாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஸ்சிஎல் என்கிற ஸ்ட்ரேடஜிக் கம்யூனிகேஷன் லேபாரட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (startagic communication labarotry india ltd) மூலம் இந்தியாவில் 7 லட்சம் கிராமங்களில் மிக நுட்பமான தகவல்களை திரட்டி அதன் மூலம் தேர்தலுக்கு பயன்படுத்தியிருப்பதையும் அறிக்கையில் தெரிவித்துள் ளார். இந்த நிறுவனம் பிடிபட்டதை தொடர்ந்து தாம் வேலை செய்த அரசியல் கட்சிகளின் பெயர்களை இணைய பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. தனது பெயரை எமர்டேட்டா என மாற்றி புதிய முகமூடியுடன் இயங்கி வருகிறது.
பகுப்பாய்வு - தரம்பிரித்தல்
நாம்தானே வாக்களிக்கிறோம் அதை எப்படி அவர்கள் தீர்மானிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கைதான். ஆனால் அவர்களின் வேலைமுறையை பார்த்தால், அதற்கான சாத்தியக்கூறை புரிந்து கொள்ள முடியும். இதில் மார்க்கெட்டிங் வல்லுநர்கள், கணினி நிபு ணர்கள், உளவியல் வல்லுநர்கள் உள்ளிட்டவர்களின் மிகச் சிறந்த ஆய்வுகளை உள்ளடக்கி ஒன்றிணைத்து அதிலி ருந்து பகுப்பாய்வு செய்கின்றனர். அதில் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை உறுதி செய்கின்றனர். அம்முடிவின்படி ஒருவரை எந்த கருத்துருவுக்கு உடன்பட செய்ய வேண்டுமோ அந்த கருத்தை படிமுறை அடிப்படையில் கொண்டு சேர்க்கின்றனர். அது அவர்களுக்கு 90 சதவிகித வெற்றியை தருவதாக கூறுகின்றனர். இந்த ஆய்வு தற்போது ஆளுமை உளவியலுடன் ( personality psycology) இணைத்து, செயற்கை நுண்ண றிவு திறன் கொண்ட பிரத்யேக கணினிகளை கொண்டு நடைபெறுகிறது. பல லட்சம் பேரின் தகவல்கள்அடங்கிய பிக்டேட்டாவை சில வினாடிகளில் இந்த முறையில் தரம்பிரித்து வகைப்படுத்துகின்றனர். அதன் பின்னர் பிரிவு வாரியாக தனித்தனியாக வீடியோ, படங்கள், செய்திகளை உற்பத்தி செய்து அவர்களை மூளைச்சலவை செய்யும் வேலை நடைபெறுகிறது. அதன் மூலம் தங்களின் கருத்தாக்கத்தை ஏற்க செய்து இசைவை பெறுகின்ற னர். அந்த இசைவு வாக்குகளாக மாற்றப்படுகிறது.
பாஜகவின் நரிதந்திரம்
இந்தியாவில் பாஜக பரந்து விரிந்த அளவில் தகவல் தொழில்நுட்ப குழுக்களை வைத்திருந்தாலும், அவர்கள் செய்யும் வேலையை தீர்மானிப்பது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா போன்ற நிறுவனங்கள்தான். இவர்களின் தொடர்புடன் பல்வேறு வகையில் தனது செயல்பாட்டை அரசியல் களத்தில் செயல்படுத்தி வரும் நிறுவனங்களில் ஒன்றுதான் ஐபேக் என்ற இந்திய அரசியல் செயல்பாட்டுக்குழு (Indian Political action commitee - I PAC ) . அதன் இயக்குநர் பிரசாந்த் கிஷோர். இது போன்ற பல்வேறு நிறுவனங்களை பாஜகவிற்காக தேர்தல் காலத்தில் களம் இறக்கியது. அந்த நிறுவனங்கள் தற்போதும் தொடர்ந்து ஆர்எஸ்எஸ், பாஜக கருத்துக்களுக்கு ஆதரவாக மக்களிடம் இசைவை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நிறுவனமயமாகும் அரசியல்
இதுவரை இந்தியாவில் மக்களுடன் நேரடியாக இருந்த அரசியல் இப்போது நிறுவனமயப்படுத்தப்பட்டு கார்ப்பரேட் அரசியலாக மாற்றம் பெற்று வருகிறது. பாஜக மட்டுமல்ல ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதே பாணியில் களம் இறங்கியிருக்கின்றன அதன் விளைவு இந்த கட்சிகளுக்கு தேர்தல் அறிக்கை முதல் வேட்பா ளர் தேர்வு வரை இந்த நிறுவனங்களே முடிவு செய்யும் அவலமும் நடைபெற்று வருகிறது.
தமிழகம்
பாஜகவுடன் சேர்ந்திருக்கும் அதிமுக தற்போது பாஜகவின் கூட்டாளியாக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக செய்தி கள் வருகின்றன. அதன் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக ஊடகங்களில் தற்போது படிப்படியாக அதிமுக, பாஜக செல்வாக்கு அதிகரித்து வருவது போலவும், எடப்பாடி பழனி சாமி ஒரு திறன்மிக்க தலைவராக உருவெடுத்திருப்பதாகவும் முதன்மைப்படுத்தப்படுகிறது. அதற்கேற்றவாறு சமூக ஊடகம் மூலம் மக்கள் வாக்களிப்பதாகவும் ஊடகங்களின் வாயிலாக கருத்துருவாக்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இவர்களை எல்லாம் பாஜக பின்னுக்கு தள்ளியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தையும் உள்ள டக்கி கார்ப்பரேட் தேர்தல் நிறுவனங்களால் தமிழகத்திற்கான பிரத்யேக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் வீச்சு மிக அதிகமாக இருக்கும் என இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.1. தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப் பட்ட வகையில் சமூக ஊடக நெட்ஒர்க். 2. அதன் வழியாக தினமும் அந்த பகுதியின் தன்மைக்கு ஏற்ப பொதுமக்களி டம் குறைந்தது 4 செய்திகளை கொண்டு சேர்ப்பது. 3.ஒவ்வொரு வாரமும் ஒரு மத்திய அமைச்சர் தமிழகத்தில் இருப்பதை உறுதி செய்வது. 4. அத்திவரதர், வைகை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மூலம் பாஜவிற்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசின் பங்கேற்பு டன் செயல்படுத்துவது என திட்டங்கள் விரிகின்றன. குறிப்பாக தமிழக ஊடகத்துறையை முதலில் தங்களின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வருவது. அதற்கு உடன்படாத நபர்களை ஊடகத்துறையில் இருந்து தனிமைப்படுத்துவது. தமிழக சினிமா துறையிலும் இதே பாணியை கையாள முடிவு செய்திருக்கின்றனர். அதற்கடுத்து தமிழக ஆசிரியர்களில் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கொண்டவர்களை கையாள்வது குறித்த திட்டத்தையும் சப்தமின்றி செயல்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகளையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொள் ளும் இயந்திரங்களாக மக்களை தயார் செய்யும் வேலை தீவிரமடைந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் முடியும். ஜனநாயகத்தின் மூச்சாக இருப்பதே ஒருவர் முழு சுதந்தி ரத்துடன் சுய சிந்தனை அடிப்படையில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயல்பட அனுமதிப்பதே ஆகும். ஆனால் கார்ப்ப ரேட் அரசியல் என்பது ஒருவரின் சுதந்திரமான சிந்தனையைக் களவாடி ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு இயங்க செய்வதாக இருக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதே சமூக ஊடகத்தின் மூலம் திட்டமிட்ட அடிப்படையில் செயல்பட்டால் இவர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த முடியும். அதன் மூலம் மக்களிடம் இருந்து நிறுவனமயப்படுத்தப்படும் அரசியல் கட்சிகளையும் தனிமைப்படுத்தி, இந்தியாவின் ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க முடியும்.